ஊரடங்கு தளர்வு – காற்று மாசு உயர்வு!!!

ஊரடங்கின்போது டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் குறைந்திருந்த காற்று மாசு, தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் வீடுகளிலேயே இருந்ததாலும், வாகனங்கள் இயக்கப்படாததால், தொழிற்சாலைகள் இயங்காததாலும் காற்று மாசு வெகுவாக குறைந்து காணப்பட்டது. குறிப்பாக இந்தியாவின் பல நகரங்களில் சுமார் 80% வரை காற்று மாசு குறைந்திருந்தது. காற்றில் நைட்ரஜன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் அளவும் குறைந்ததாகவும், செயற்கைக்கோள் புகைப்படங்களும் அதனை உறுதி செய்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஆனால், தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதால் வாகனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை பழையபடி இயங்க தொடங்கியுள்ளன. இதன் காரணமாக காற்று மாசு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய 6 பெருநகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், டெல்லியில் முன்பை காட்டிலும் 8 மடங்கு வரை காற்று மாசு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில், டெல்லியில் 6 மடங்கு வரை காற்று மாசு உள்ளதாகவும் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. டெல்லியில் ஜனவரி மாதம் 84,399 கனரக வாகனங்கள் பயணித்ததாகவும், ஆனால் ஏப்ரல் மாதத்தில் அந்த எண்ணிக்கை வெறும் 8,000ஆக குறைந்ததாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வழக்கம்போல அதிக வாகனங்கள் பயணிக்க தொடங்கியுள்ளதால் காற்று மாசும் அதிகரித்துள்ளது. ஊரடங்கின் தொடக்கத்தில், சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களில் 45% முதல் 88% வரை காற்று மாசு குறைந்திருந்தது. தற்போது அந்த நகரங்களில் காற்று மாசு 2 மடங்கு உயர்ந்துள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அதேபோல், Greenpeace india என்ற அமைப்பும் காற்று மாசு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி, கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் காற்று மாசு 55.56% குறைந்திருந்ததாகவும், நைட்ரஜன் டை ஆக்ஸைடு வாயுவின் செறிவு 23.86% குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துடன் ஒப்பிடும்போது சென்னையில் காற்று மாசு குறைவாகவே இருந்ததாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. ஆனால், தற்போது சென்னை உள்ளிட்ட பல நகரங்களிலும் காற்று மாசு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. காற்று மாசு மேலும் அதிகரிக்காமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Exit mobile version