தமிழ்நாட்டில் மட்டும் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்துள்ளது. தினசரி பலி எண்ணிக்கையும் 400-ஐ நெருங்கி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 24ம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, முதலமைச்சர் நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரின் ஆலோசனைக்குப் பின்னர், இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள், காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கின்றனர்.