தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 11 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வகை 1-ல் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மின் பொருட்கள், ஹார்டுவேர், புத்தக விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காலணிகள் விற்பனை கடைகள், பாத்திர கடைகள், வாகன விற்பனை மற்றும் பழுது பார்க்கும் மையங்கள், செல்போன் மற்றும் கணினி விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய துறைகள் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள், 50 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படவும், அரசு பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.