தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் மேலும் பல தளர்வுகளுடன் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1 முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதில், மேலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி செப்டம்பர் 1ம் தேதி முதல், 9,10, 11 மற்றும்12ம் வகுப்புகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் வகுப்புகள் செயல்படுவதை கண்காணித்து, மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் திறப்பது குறித்து செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து கல்லூரிகளிலும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை துறையின் செயலர்கள் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று அனைத்து பட்டயப் படிப்புக்கான வகுப்புகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

Exit mobile version