ஆகஸ்ட் 31ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்துக்கான தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு, ஆகஸ்ட் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும், சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற இடங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும் எனவும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய மதவழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம் என்றும், அதே நேரத்தில் மாநகராட்சி பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்கள் மற்றும் பெரிய வழிபாட்டு தலங்களில் மக்கள் தரிசனம் செய்ய தடை தொடர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கவும், பிற கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்துக்கான தடை தொடரும் எனவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சமூக இடைவெளியுடன் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, சுதந்திர தின விழா கொண்டாடப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version