இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கை 84 புள்ளி 7 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, மகாராஷ்டிராவின் கோல்ஹாபூர் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 11 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கேரள மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
வரும் 9-ம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு காலத்தில் இன்றியமையாத சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சாலைகளில் தேவையின்றி நடமாடுபவர்களை மடக்கி பிடித்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
பீகாரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 15ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு, முழு ஊரடங்கு முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
முழு ஊரடங்கிற்கான வழிகாட்டல்களை உருவாக்க நெருக்கடி கால நிர்வாக குழு ஒன்றையும் ஏற்படுத்தி உள்ளதாக நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் அம்பாலாவில், ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கினர்.
அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகளை மீறி வெளியே வந்தவர்களை பிடித்த காவல்துறையினர், பலமுறை தோப்புக்கரணம் போட வைத்து, எச்சரித்து அனுப்பினர்