முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் திமுக எம்.பி. ரமேஷ், தினமும் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் கோவிந்தராசு கடந்த செப்டம்பர் 19ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திமுக எம்பி ரமேஷ், அக்டோபர் 11ம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பின்னர், கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமின் கோரி கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார், திமுக எம்பி ரமேஷுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
தினமும் காலை 11 மணிக்கு காடாம்புலியூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்கக் கூடாது, விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிபந்தனைகளை பின்பற்ற தவறினால், மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி கோவிந்தராசு மகன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வரும் திங்களன்று தீர்ப்பளிக்க உள்ளது.