ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பரபரப்பான லீக் ஆட்டத்தில், கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர்கிங்ஸ்.
மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ரித்துராஜ் கெய்க்வாட், டுபிளசிஸ் அதிரடியாக விளையாடி சென்னை அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். ரித்துராஜ் கெய்க்வாட் 42 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மொயின் அலி 12 பந்துகளில் 25 ரன்களும்,கேப்டன் தோனி 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற டுபிளசிஸ் 60 பந்துகளில் 95 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்சர்களும்,9 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது.
221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே பூதாகரமாக இருந்தது. சென்னை அணியின் தீபக் சாஹர் பந்துவீச்சில் கொல்கத்தா அணியின் முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 31 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் மூலம் சென்னை அணியின் வெற்றி உறுதி என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்த ரசல், சென்னை அணியின் பந்துவீச்சை, மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தார். 22 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த நிலையில், சாம்கரன் பந்துவீச்சில் ரசல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தினேஷ் கார் த்திக்கும் 40 ரன்களில் வெளியேற, மைதானத்திற்குள் சூறாவளியாக நுழைந்த கொல்கத்தா அணியின் கம்மின்ஸ், மைதானத்தில் சிக்சர் மழை பொழிந்தார். சாம் கரண் வீசிய ஒரே ஓவரில் 30 ரன்கள் விளாசினார்.
இருப்பினும் கம்மின்ஸ்க தனி ஆளாக நின்று போராடினார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலே கொல்கத்தா அணி கடைசி விக்கெட்டையும் பறிகொடுத்தது. இதன் மூலம் 202 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
இதனிடையே இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில், ராயல், சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.