உயிரிழந்த வீரர்களின் உடல்கள் இன்று தமிழகம் கொண்டுவரப்படுகிறது

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் இன்று காலை தனி விமானம் மூலம் தமிழகம் கொண்டுவரப்பட உள்ளது.

காஷ்மீரில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 44 வீரர்கள் வீர மரணமடைந்தனர். அரியலூர் மாவட்டம், கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் சிவசந்திரன் உயிரிழந்த செய்தியைக் கேட்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். அவரது மனைவி காந்திமதி, செய்தியாளர்களிடம் பேசும்போது, தற்போது சிவசந்திரனை இழந்து தாங்கள் அநாதையாக நிற்பதாக கண்ணீர் மல்க கூறியது, அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இதேபோல் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மற்றொரு தமிழக வீரர் தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்ரமணியன். இவரது உயிரிழப்பால், குடும்பத்தினர் மட்டுமல்லாது கிராம மக்களே மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக திகழ்ந்த ஒருவரை இழந்து விட்டதாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர்.

இதனிடையே உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். உயிரிழந்த தமிழக வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் இன்று டெல்லியில் இருந்து திருச்சி கொண்டுவரப்பட உள்ளது. அங்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்திய பிறகு, அவரவர் சொந்த ஊர்களுக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட உள்ளன.

Exit mobile version