உலககோப்பையில் அரையிறுதிக்கு இந்திய அணி கடந்து வந்த பாதை..

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12 வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் லீக் சுற்றில் மோதாத இந்திய-நியூஸிலாந்து அணிகள் நேராக அரையிறுதியில் இன்று மோத உள்ளது. இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை பற்றிய ஒரு தொகுப்பை தற்போது காணலாம்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே 12 வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கிய நிலையில், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு தொடரில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்து 7 வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், வலுவான அணியாக இந்தியா வலம் வருகிறது. இங்கிலாந்துடனான லீக் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 7 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், நியூஸிலாந்துடனான லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த இரு அணிகளும் நடப்பு உலக கோப்பையில் முதல் முறையாக அரையிறுதியில் சந்திக்க உள்ளன. தனி நபர் சாதனைகள் ஏதும் படைக்காத பட்சத்தில் ஒரு அணியாக செயல்படுவதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி சிறந்து விளங்கி வருகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நடப்பு தொடரில் வலுவான அணிகளை வீழ்த்தியதன் மூலம் தன்னை மீண்டும் நிரூப்பித்து நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய அணியின் முக்கிய வீரரான ரோஹித் ஷர்மா நடப்பு உலக கோப்பையில், 5 சதங்கள் அடித்து அசத்தியதுடன் 703 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்து மகத்தான சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்னதாக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 4 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பந்து வீச்சை பொறுத்த வரை பும்ரா 17 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பந்து வீச்சாளராக வலம் வருகிறார்.

நியூஸிலாந்து அணியை பெறுத்தவரை நடப்பு தொடரில் சிறந்த அணியாக தொடர் வெற்றிகளை குவித்து வந்த நிலையில், கடைசி 3 லீக் போட்டிகளில் தோல்வியடைந்து தடுமாறி வருகிறது. அதேபோல், இந்திய அணியும் கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், அரையிறுதியில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேற தீவிரம் காட்டி வருகிறது. தற்போது உலக கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருவதால் பழக்கப்பட்ட சீதோஷ்ண நிலையும் நியூஸிலாந்து அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் மான்செஸ்டர் மைதானம் பேட்டிங்க்கு சாதகமான நிலையில், டாஸ் வென்ற அணி பேட்டிங்கையே தேர்வு செய்யக்கூடும் எனவும் கருதப்படுகிறது. குறிப்பாக பயிற்சி ஆட்டத்தின் போது இந்தியா, நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்த நிலையில், வலுவான நியூஸிலாந்து அணியை முதல் முறையாக அரையிறுதியில் எதிர்கொள்ளும் இந்தியா, தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்!!!..

Exit mobile version