கிரிக்கெட் போட்டிகளில் சாதனை படைத்த மிதாலி ராஜ் பற்றிய சிறப்புத் தொகுப்பு

இப்படி ஒரு சாதனையா என வியக்கும் அளவிற்கு சச்சின் டெண்டுல்கரின் சாதனைக்கு அடுத்ததாக 20 ஆண்டுகளாகப் பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார் மிதாலி ராஜ். அவரை பற்றிய சிறப்புத் தொகுப்பு…..

சிங்கப் பெண்ணே எனப் போற்றும் அளவிற்கு கிரிக்கெட் உலகில் சாதனை படைத்துள்ளார் மிதாலி ராஜ். பன்னாட்டுக் கிரிக்கெட் போட்டிகளில் அதிகக் காலம் விளையாடிய வீராங்கனையாகத் திகழ்கிறார்.

1982 டிசம்பர் 3ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் பிறந்தவர் மிதாலிராஜ். இவரின் தந்தை துரைராஜ் நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இந்திய விமானப் படையில் பணியாற்றிய துரைராஜ் பணி நிமித்தமாகப் பல ஊர்களுக்குச் செல்ல நேரிட்டது. அப்படி செகந்திராபாத்தில் துரைராஜ் பணியாற்றிய காலத்தில், அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரிக் கல்வியைத் தொடர்ந்தார் மிதாலிராஜ்.

பரதநாட்டியத்தின் மீது ஆர்வம் கொண்ட மிதாலிராஜை கிரிக்கெட் பக்கம் திசை திருப்பியவர் மிதாலியின் தந்தை. பெண்களும் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என எண்ணிய மிதாலியின் தந்தை மிதாலியை கிரிக்கெட் பயிற்சி பெறச் செய்தார். தனது சகோதரர் கிரிக்கெட் பயிற்சி பெறும் அதே இடத்தில் மிதாலியும் கடினமாகப் பயிற்சி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து 1997ஆம் ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ் பெயரும் இடம்பெற்றிருந்தது. அப்போது அவருக்கு 14 வயது தான். சில காரணங்களால் அப்போது மிதாலிராஜ் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. ஆனால் தொடர்ந்து உள்ளூர்ப் போட்டிகளில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்ததால் மிதாலிராஜ் கிரிக்கெட் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தார்.

1999ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கினார் மிதாலி ராஜ்.
அப்போது அதிரடியாக 114 ரன்கள் குவித்து வரலாற்றில் புதிய மைல் கல்லை நட்டு வைத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியைத் தொடர்ந்து பிசிசிஐ பெண்கள் கிரிக்கெட் அணியை ஊக்குவித்து வந்ததது. அதனை தொடர்ந்து மிதாலிராஜ் கிரிக்கெட் விளையாட்டில் படிப்படியாகத் தன்னை உருவாக்கிக் கொண்டது மட்டுமல்லாமல் வலுவான பெண்கள் அணியைக் கட்டமைத்து அதனை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றார்.

இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 663 ரன்களும், 205 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6797 ரன்களும் எடுத்துள்ளார். 89 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 2364 ரன்களும் பெற்றுள்ளார். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 20 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள பெறுமையை மிதாலி பெற்றுள்ளார்,இவருக்குமுன் சச்சின் டெண்டுல்கர் 22 ஆண்டுகளும் ,இலங்கையை சேர்ந்த சனத் ஜயசூரியா 21 ஆண்டுகளும் , பாகிஸ்தான் அளவில் ஜாவேத் மியாண்ட் 20 ஆண்டுகள் நிரைவு பெற்றுள்ளனர். இவருக்கு அடுத்து மிதாலி ராஜ் இடம் பெற்றிருப்பது இந்தியாவிற்கு மிக பெரிய பெருமையை சேர்த்துள்ளது. இதனை தொடர்ந்து மிதாலி ராஜின் வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Exit mobile version