”83” திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கான திருவிழா

1983ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அதன் பின்னணியில் உருவாகியுள்ள ‘83’ திரைப்படம், மாபெரும் வரலாற்றுத் தருணத்தை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளது.

கபீர் கான் இயக்கத்தில் ரசிகர்களை ஆர்ப்பரிக்கச் செய்துள்ள இந்தப் படத்தில், ரன்வீர் சிங், ஜீவா, தீபிகா படுகோனே என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

1983 உலகக் கோப்பை போட்டியை பின்னணியாகக் கொண்டு உருவான படம் என்பதால், இங்கிலாந்தில் இருந்தே திரைக்கதை தொடங்குகிறது.

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கு, கேலியும் கிண்டலும் அவமானங்களும் மட்டுமே மிஞ்சுகிறது. இதுவும் போதாதற்கு கபில் தேவின் கேப்டன்ஷிப்பும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிறது.

இதையெல்லாம் கடந்து அணியை எப்படி கபில் தேவ் ஒருங்கிணைக்கிறார்?, அவரது தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை கைகளில் ஏந்தியத் தருணம் வரையிலும் நடந்த மாபெரும் யுத்தத்தை மெய்சிலிர்க்கும் படி திரையில் காட்டுகிறது ‘83.’

1983 உலகக் கோப்பை வரலாறு எப்படியோ?, அப்படியே இந்தப் படமும் கபில் தேவ் என்ற தனிமனிதனின் போராட்டத்தையும் அவரது தலைமைப் பண்பையும் ரசிகர்களுக்கு கொண்டுபோய் சேர்க்கிறது.

“இந்தியாவுக்கு சுதந்திரம் மட்டுமே கிடைத்துள்ளது, ஆனால் இன்னும் மரியாதை கிடைக்கவில்லை” என்ற வசனம் கபில் தேவிற்கு வெற்றி வேட்கையை விதைக்கிறது.

இதேபோல் அவர் சந்திக்கும் அவமானங்கள் அனைத்தையும் தனது வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் காட்டியதும், சக வீரர்களின் திறமையை களத்தில் எப்படி உந்துசக்தியாக மாற்றினார் என்பதும் யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கபில் தேவ் தட்டுத் தடுமாறி ஆங்கிலம் பேசும் காட்சிகள், பத்திரிகையாளர்களிடம் “நாங்கள் கோப்பையை வெல்லவே இங்கிலாந்து வந்துள்ளோம்” என்று கூறும் இடங்கள், மைதானத்தில் அவரது மட்டை வேகமாக சுழன்றடித்த போட்டிகள் என படம் நெடுக கபில் தேவின் போராட்டத்திற்கு மரியாதை சேர்க்கும் படமாகவும் இது உருவாகியுள்ளது.

கபில் தேவ் பாத்திரத்தில் நடித்திருக்கும் ரன்வீர் சிங் தான் இந்தப் படத்தின் பெரும் பலம். அவரது உடல் மொழியும் அர்ப்பணிப்பும் ‘83’ படத்தை வேறு தளத்தில் நிறுத்தியுள்ளது.

அதேபோல், ஸ்ரீகாந்த், சுனில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், யாஷ்பால் சர்மா, சந்தீப் பாட்டில், கீர்த்தி ஆசாத், ரோஜர் பென்னி, மதன் லால், சையத் கிர்மானி, பல்விந்தர் சிங், திலீப் வெங்சர்க்கார், ரவி சாஸ்திரி என வீரர்களின் பாத்திரங்களும் படத்திற்கு தேவையான இடங்களில் சரியான விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீகாந்த் பாத்திரத்தில் நடித்துள்ள ஜீவா கிடைக்கும் இடங்களில் எல்லாம் அதிரடி சிக்ஸர்கள் விளாசியுள்ளார். களத்தில் தனக்கு டிபென்ஸ் ஆட வராது என்பதும், தென்னிந்திய சைவ உணவுக்காக பொய் சொல்லி மாட்டிக்கொள்ளும் இடத்திலும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் ஜீவா, கபில் தேவை ‘பைத்தியக்கார கேப்டன்’ என நகைச்சுவையாக கலாய்த்துவிட்டு இறுதியில் கண்கலங்கும் இடங்களில் ரசிகர்களிடம் அப்ளாஸ் அள்ளுகிறார். கூடவே இறுதிப் போட்டியின் போதும் அவரது அக்மார்க் ரக காட்சி கலகல.

அணியின் மேனேஜரான பி.ஆர். மான் சிங் பாத்திரத்தில் நடித்துள்ள பங்கஜ் திரிபாதி, பல இடங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார். கபில் தேவின் மனைவி ரோமி தேவ் பாத்திரத்தில் வரும் தீபிகா படுகோனே உள்ளிட்ட மற்ற பாத்திரங்களும் படத்திற்கு தேவையான பங்களிப்பைச் செய்துள்ளன.

படம் முழுவதுமே 1983 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்ததைப் போன்ற உணர்வைத் தருகின்றது. அஸீம் மிஸ்ராவின் ஒளிப்பதிவும், ஜூலியஸ் பாக்கியத்தின் பின்னணி இசையும், கிரிக்கெட் போட்டிகளை மைதானத்தின் உள்ளிருந்து பார்க்கும் அனுபவத்தை தருகிறது. சில காட்சிகள் கழுகுப் பார்வையில் படமாக்கியுள்ளது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்து கேட்ச் பிடிக்கும் கபில் தேவ், சச்சினின் ஜூனியர் வெர்ஷன் என படத்தில் ஆங்காங்கே வரும் எதிர்பாராத சில ட்விஸ்ட்டுகளும் ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா ரன்கள் தான்.

அதேபோல், 1983ம் ஆண்டில் இந்தியாவின் குறிப்பிட்ட பகுதியில் நடந்த வன்முறை, இந்தியா – பாகிஸ்தான் மோதல், இந்திய – இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களின் மோதல், சென்டிமெண்ட் காட்சிகள் போன்றவைகளும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.

1983 உலகக் கோப்பை போட்டியை பார்க்க முடியாமல் போன இளம் தலைமுறையினருக்கும், பத்திரிகைச் செய்திகளிலும் கட்டுரைகளிலும் படித்து இன்புற்றவர்களுக்கும் விஷுவல் ட்ரீட் கொடுக்கும் படமாக ‘83’ இருக்கும் என்பதே உண்மை.

படத்தின் இறுதியில் உலகக் கோப்பை அனுபவம் குறித்து கபில் தேவை பேசவைத்த இயக்குநர் கபீர் கானுக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுகள்.

– அப்துல் ரஹ்மான்

Exit mobile version