ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லாவிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2002ம் முதல் 2011ம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்திற்கு 113 கோடி ரூபாய் நிதி வழங்கியது. இதில் 43 கோடியே 69 லட்சம் ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்த புகாரில் அப்போது ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
அவரை தவிர அன்று கிரிக்கெட் சங்க பொதுச்செயலாளராக இருந்த எம்.டி சலீம்கான் பொருளாளராக இருந்த அகமது மிர்சா மற்றும் ஜம்மு காஷ்மீர் வங்கியின் நிர்வாகியாக இருந்த பஷிர் அகமது மிஸ்கர் ஆகியோர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லாவிடம் மத்திய அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.