கடன் மோசடி வழக்கில் கைதாகியிருக்கும் தொழிலதிபர் நிரவ் மோடியின் நான்கு வங்கி கணக்குகளை ஸ்விஸ்சர்லாந்து அரசு முடக்கியுள்ளது.
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றிருந்த தொழிலதிபர் நிரவ் மோடி அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். இந்த மோசடி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்தியாவில் உள்ள நிரவ் மோடியின் பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டன. கடந்த மார்ச் 20ம் தேதி லண்டனில் நிரவ் மோடி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஸ்வீஸ் நாட்டில் உள்ள அவரது வங்கி கணக்குகளை அந்நாட்டு அரசின் துணையுடன் மத்திய அரசு முடக்கியுள்ளது. நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பூர்வி மோடி பெயரில் ஸ்வீஸ் வங்கியில் இருந்த 283 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் ஸ்விஸ்சர்லாந்து அரசு முடக்கி உள்ளது.