இரட்டை மாட்டு வண்டி தயாரிக்கும் தொழில் அழிந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு மானிய உதவிகளை வழங்கி அத்தொழிலை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரேக்ளா பந்தயத்திற்கான மாட்டு வண்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ரேக்ளா பந்தயங்கள் நடைபெறாததால் அத்தொழில் மிகவும் நலிவடைந்தது.
இந்நிலையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேக்ளா பந்தயத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, மாட்டு வண்டிகள் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
மாட்டு வண்டிகள் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி, ஈரோடு, கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் ஆர்டர்களின் பேரில் செய்து அனுப்பப்படுகின்றன.
இரவு-பகலாக மாட்டு வண்டி தயாரிப்பு பணிகள் முடிவடைந்த பின்பு, ஆட்கள் நடமாட்டம் இல்லாத தோப்பு பகுதியில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்யப்படுகிறது. இதன் மூலம் மாட்டு வண்டியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்து வாடிக்கையாளர்களுக்கு தரமான ரேக்ளா வண்டிகள் கொடுக்கப்படுகின்றன.
முந்தைய காலகட்டங்களில் உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலை செய்து வந்த நிலையில், காலப்போக்கில் அத்தொழில் நலிவடைந்து தற்போது ஒருசில குடும்பத்தினர் மட்டும் அத்தொழிலை செய்து வருகின்றனர்.
மாட்டு வண்டி தயாரிப்பாளர்களுக்கு தமிழ்நாடு அரசு மானியம் வழங்கி, நலிவடைந்து வரும் இத்தொழிலை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.