அரசின் மெத்தனத்தால் தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு அதிகரிப்பு

ரெம்டெசிவர் மருந்துக்காக பொதுமக்கள் இரவு பகலாக காத்திருக்கும் நிலையில், அரசின் மெத்தனத்தால் தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மருத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து வாங்க பொதுமக்கள் இரவு பகலாக காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.

மருந்து பெற டோக்கன் வாங்க கூட்டம் முண்டியடிப்பதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், இன்றும் ஏராளமான மக்கள் மருந்து வாங்க காத்திருந்தனர். சிலர் மருந்து பெற்ற நிலையில் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேபோல், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் ரெம்டெசிவர் மருந்துக்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மருத்துவர் பரிந்துரைத்த எண்ணிக்கையை விட குறைந்த அளவே ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கப்படுவதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மருந்து பெற வரும் பொதுமக்கள் செய்தியாளர்களிடம் பேசக் கூடாது என்று அதிகாரிகள் மிரட்டுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்

Exit mobile version