சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் இல்லாததால், கொரோனா நோயாளிகள் பலமணி நேரம் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் அவலம் நிலவி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பானது 64 ஆயிரத்தை கடந்துள்ளது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதால் ஆக்சிஜன் மற்றும் ஐசியு படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால், புதிய நோயாளிகளுக்கு இடம் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. மேலும், ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அவலமும், தரையில் படுக்கவைக்கப்படும் கொடுமையும் அரங்கேறியுள்ளது.
இதுஒருபுறம் இருக்க, ஆக்சிஜன் படுக்கைக்காக கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே பல மணி நேரம் காத்துக்கிடக்கும் நிலையையும் காண முடிகிறது. கொரோனா வார்டில் இறந்தவரின் சடலம் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதால், தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே சிலிண்டரில், ஐந்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதாக நோயாளிகளின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.