சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு அறை மீண்டும் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் ஆலோசனை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் கொரோனா கட்டுபாட்டு அறையை மீண்டும் திறந்து வைத்த பிறகு பேசிய பிரகாஷ், கொனோரா இரண்டாம் அலை அதிகளவில் பரவி வருவதை தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
கடந்த முறை போல், இந்த முறையும் 100 தொலைபேசிகள் கொண்ட ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டுப்பாட்டு மையம் மூலம் 24 மணி நேரமும் மருத்துவர்களை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
தொலைபேசி கட்டுபாட்டு மையம் மூலம் தடுப்பூசி எடுத்து கொள்வது மற்றும் தனிமைப்படுத்தி கொள்ளுதல், தொற்று பாதித்தவர்கள் மருத்துவமனையில் சேருவது ஆகியவை குறித்த ஆலோசனைகளை பெற கட்டுப்பாட்டு மையம் உதவிகரமாக இருக்கும் என அவர் கூறினார்.
கட்டுபாட்டு மையத்தில் 24 மணி நேரமும் 120 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டு 4 லட்சம் அழைப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் இதுவரை 11 லட்சத்து 52 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரகாஷ்,
நடிகர் விவேக் மரணத்திற்கும், கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்புவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.