போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியுள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது, வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, கணேஷ் குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். அதன்படி, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவர்களது நண்பர்கள் நான்கு பேர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை எம்.பி – எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பாக கோடிக் கணக்கில் பணம் பெற்றது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றிய மத்திய குற்றப்பிரிவு போலீசார், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 47 பேருக்கு எதிராக 7 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்நிலையில், செந்தில் பாலாஜி உள்பட வழக்கில் தொடர்புடையவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கு விசாரணை வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது.