கோவையில் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இரண்டு விரைவு நீதிமன்றங்கள், இரண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் மூடப்பட்டன.
கோவையில் 45 வயதான நீதிபதி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் அவருடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட மற்றொரு நீதிபதி, மாஜிஸ்திரேட்டு ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது. இருந்தபோதிலும் அவர்கள் 2 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டனர். இதனிடையே, நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கோவையில் உள்ள இரண்டு விரைவு நீதிமன்றங்கள், இரண்டு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்கள் வரும் 10 ஆம் தேதி வரை மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.