டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

கட்டுமான நிறுவனம் குறித்து பொய்யான செய்தி வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ஆசிரியர், வெளியீட்டாளர், செய்தி சேகரிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவையைச் சேர்ந்த பி.செந்தில் அண்ட் கோ என்ற கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரர் அன்பரசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அதில் தங்கள் நிறுவனம் முறையாக டெண்டர் எடுத்து பல அரசுப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் கோவை பதிப்பில் தங்கள் நிறுவனம் மீது, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அவதூறான செய்தியை வெளியிட்டதற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும், இனிமேல் தங்கள் நிறுவனம் பற்றி பொய்யான தகவல்களை முன்வைத்து செய்தி வெளியிடக்கூடாது என்றும் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கருத்துக்களைக் கேட்ட பின்னரே செய்தி வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் அவதூறாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் மீது கட்டுமான நிறுவனம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஸ்குமார் , டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ஆசிரியர் அருண் ராம், வெளியீட்டாளர் சந்தான கோபால், செய்தி சேகரிப்பாளர் கோமல் கவுதம் ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version