கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என கருத்து தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இதுவரை அதுகுறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் முடிவெடுக்கவில்லை. இதையடுத்து, ராஜினாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதிருப்தியாளர்கள் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, கர்நாடகா சபாநாயகர் ஒரே நேரத்தில் இருவித நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறு என கூறினார்.
இதற்கு கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சபாநாயகருக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது என கூறினார். இதனிடையே, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் முடிவெடுக்க நாளை வரை கால அவகாசம் அளிக்க கர்நாடகா சாபாநாகர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.