கொரோனாவின் கோர தாண்டவம் நாடு முழுவதும் வேகமெடுத்து வரும் நிலையில், இந்தியாவில் அதிக பாதிப்புகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 4-வது இடத்தில் உள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால், ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் மணிக்கணக்கில் மருத்துவமனை வாயில்களில் காத்திருக்கும் அவல நிலைகளை நம்மால் தினந்தோறும் காண முடிகிறது.
லேசான அறிகுறி தென்படுபவர்கள் பலர் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். அவ்வாறு வீட்டு தனிமையில் இருப்பவர்களும், தொற்றால் பாதிக்கப்படுபவர்களும் மனரீதியில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவின் வீரியத்தால் பீதியின் உச்சத்திற்கு செல்லும் மக்களுக்கு பிற உடல் உபாதைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.. அவ்வாறு மனரீதியில் பாதிக்கப்படுபவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியுள்ளது.
நோயாளிகளின் நலனுக்காக கடந்த ஆண்டு ஊரடங்கின் போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர்கள், மனநல ஆலோசகர்களை கொண்டு 24 மணி நேரமும் இயக்கும் இந்த கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.
தினசரி வீட்டுத்தனிமையில் உள்ள நோயாளிகளை தொடர்பு கொள்ளும் நிபுணர்கள், அவர்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்குகின்றனர்.. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக அழைப்புகள் வந்துள்ள நிலையில், 30 சதவீதம் மக்கள் தேவையற்ற மன உளைச்சல், வீண் பயத்தை எதிர் கொள்வதாக கூறுகிறார் துணை ஆணையர் ஆல்பி ஜான்.ஐ.ஏ.எஸ்.
தொற்று வந்தால் கூட அதனை எதிர்கொள்ளும் மனதைரியம் இருந்தால், நோயிலிருந்து பாதி குணமடைய முடியும் எனக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.. தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த இக்கட்டான சூழலில், மனரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ள இந்த கட்டுப்பட்டு அறை மக்களுக்கு பயனளிக்கும்
நியூஸ் ஜெ செய்திகளுக்காக பிரேம்நாத் மற்றும் சிவா..