நிதியுதவி அளித்த தன்னார்வ அமைப்பினருக்கும், செய்தி ஒளிபரப்பு செய்த நியூஸ் ஜெ-விற்கும் மாற்றுத்திறனாளி தம்பதி நன்றி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே, நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக, 10 மாத குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதி திரண்டது.

மேலச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதிகளான மதுரைவீரன் – மாரி ஆகியோருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணமாகிய நிலையில், 5 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், குழந்தையின் இருதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பதாகவும், குழந்தைக்கு கட்டாயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த மாற்றுத்திறனாளி தம்பதி, அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வந்தனர்.

இதுதொடர்பாக, நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது.

இதையடுத்து சாயல்குடியில் உள்ள உங்கள் நண்பன் அறக்கட்டளை சார்பாக 75 ஆயிரம் ரூபாயும்,

திரைப்பட நடிகர் சக்தி சரவணன், நாடக நடிகர் ராதா கிருஷ்ணன் மற்றும் மேலச்செல்வனூர் யாதவ இளைஞர் சங்கம் ஒன்றிணைந்து 3 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்பட்டது.

உதவிக்கரம் நீட்டியவர்களுக்கும், செய்தியை ஒளிபரப்பு செய்த நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version