தொடர்மழையினால் முழுக்கொள்ளளவை எட்டிய அரும்பாவூர் ஏரி பற்றிய செய்தித் தொகுப்பு

தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் முழுக்கொள்ளளவை எட்டியுள்ள அரும்பாவூர் ஏரி குறித்து இந்த செய்தித் தொகுப்பு

தமிழக அரசின் குடிமாரமத்து திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள உள்ள 14 ஏரிகள் சுமார் 3 கோடியே 48 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பருவமழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள நான்கு பிரதான ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

இதில் 53 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அரும்பாவூர் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரிநீர் தடுப்புகளைத் தாண்டி நீர் வழிந்து ஓடுகிறது. அரும்பாவூர் ஏரி 25 லட்ச ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டு மதகுகள் சரிசெய்யப்பட்டன. மேலும் அணைக்கு வரும் வாய்க்கால்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டன. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரியிலிருந்து உபரிநீர் முறையாக வெளியேற்றப்படுகிறது.

ஏரி முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதால் ஏரியைச் சுற்றியுள்ள சுமார் 570 ஏக்கர் நிலங்களில் விவசாயப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இங்கு இருந்து வழிந்து ஓடும் நீரானது அரும்பாவூர் சித்தேரிக்கு செல்வதால் தற்போது சித்தேரியும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பி வழிவதால் பொது மக்கள் ஏரியை சுற்றுலா தளம் போல் வந்து கண்டு களித்து செல்கின்றனர் . மேலும் சிறுவர்கள் நீரில் நீச்சல் அடித்து விளையாடி வருகின்றனர்.

குடிமராமத்து பணியின் மூலம் ஏரி குளங்கள் நிரம்பி வருவதால் இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் இருக்காது எனவும் , விவசாயம் செழிக்கும் எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தமிழக அரசுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version