கஞ்சா கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளியை பிடிக்க ஆந்திரா சென்ற சென்னை போலீசார் மீது, நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு, கஞ்சா கும்பல் தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், விருகம்பாக்கம் அருகே, கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா புழங்குவதாக வந்த தகவலையடுத்து, மாணவர்களை மடக்கிபிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த ஹரி என்பவர் மூலம், மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, அதை பொட்டலங்களாக பிரித்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, கஞ்சா வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹரி, ஆந்திர மாநிலம் தடா அருகே பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, மதுரவாயில் உதவி ஆய்வாளர் சுதாகர் தலைமையில், 6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர்.
அங்கு சென்ற போலீசார், கஞ்சா வியாபாரி ஹரி பதுங்கியிருக்கும் வீட்டை சுற்றி வளைத்தனர். தாங்கள் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டதை அறிந்து, ஹரியுடன் சேர்ந்த கஞ்சா கும்பல், தங்களிடம் இருந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் மீது வீசினர்.
இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் காவலர் வேல்முத்து ஆகியோருக்கு தலை, கழுத்து, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்ட , அருகே இருந்த பொதுமக்கள் நாட்டுவெடிகுண்டு வீசி தப்பியோட முயன்ற கஞ்சா கும்பலை சேர்ந்த 3 பேரை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, உடலில் காயங்களுடன் சென்னை திரும்பிய உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் காவலர் வேல்முத்து ஆகியோர், மதுரவாயலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், தப்பியோடிய முக்கிய குற்றவாளியான ஹரி உட்பட, கஞ்சா கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.