ராணிப்பேட்டையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை 19 மணி நேரம் நடத்திய அதிரடி சோதனையில், கட்டுக்கட்டாக பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில், இணை முதன்மை பொறியாளராக பன்னீர்செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் லஞ்சம் வாங்குவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சுமார் 19 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.3,25,00,000 ரொக்கம், மூன்றரை கிலோ தங்கம், ஆறரை கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நில ஆவணங்களும் சில சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.