மயானங்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சடலங்களை எரியூட்ட நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இறுதிச்சடங்கைக் கூட போராடி நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகம் இதுவரை கண்டிராத சோக காட்சிகளை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தலைவிரித்தாடும் நிலையில், நாளுக்கு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
பெரும்பாலான மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கீரைத்துறை மின் மயானத்தில் சடலங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும் பொதுமக்களிடையே வேதனையை கூட்டியுள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வரும் நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரியூட்டவும் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளதாக உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னையில் உள்ள 5 முக்கிய அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட கொரோனா படுக்கைகள் பெரும்பாலும் நிரம்பியுள்ளன.
தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் தினசரி மரணங்களும் அதிகரித்துள்ளன.
சென்னை அம்பத்தூர் மின் மயானத்தில் கொரோனா நோயாளிகளின் உடலை எரியூட்ட 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோரின் உடலை எரிக்க டோக்கன் விநியோகிக்கப்படுவதால், கொரோனா நோயாளிகளின் சடலங்களுடன் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன
மயானங்களில் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலையை ஏற்படுத்தாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெம்டெசிவிருக்காக காத்திருக்கும் சூழல், ஆக்சிஜன் பற்றாக்குறையுடன் மருத்துவமனைகள், சிகிச்சையின்றி ஏற்படும் மரணங்களால் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது