விதிகளை மீறினால் ரூ.2,000 அபராதம் – தனியார் நட்சத்திர விடுதிக்கு சீல்!

வீட்டுத் தனிமையில் இருப்போர் விதிகளை மீறி வெளியே வந்தால், இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

சென்னை பல்லவன் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கொரோனா தடுப்புசிறப்பு அதிகாரி சித்திக் இணைந்து ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகர ஆணையர் பிரகாஷ், தடுப்பூசி செலுத்துவதால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்றும், சென்னையில் இதுவரை 90 சதவிகித முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறினார். சென்னையில் 15 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 21ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், விதிமுறைகளை மீறி யாரேனும் முதல்முறை வெளியே சென்றால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், 2வது முறை வெளியே சென்றால் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் எச்சரித்தார்.

கொரோனா பரவலை கருத்தில்கொண்டு, வாக்கு எண்ணும் மையங்களில் அரசியல் கட்சிகள் சார்பில், குறைவான நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என்பதை உறுதியுடன் கூறுவதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார். வாக்கு எண்ணிக்கையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே சென்னையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் நட்சத்திர விடுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கோயம்பேடு மேம்பாலம் பகுதியில் இயங்கிவரும் நட்சத்திர விடுதியில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அனுமதிக்கப்பட்ட 50 பேருக்கு பதிலாக, 300 பேர் வரை திரண்டதால், கோடம்பாக்கம் மண்டல அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

Exit mobile version