இந்தியாவில் கொரோனா வைரஸூக்கு 17 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 17 பேர் பலியாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 724ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 677 பேர் இந்தியர்கள், 47 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். அதிகபட்சமாக கேரளாவில் 137 பேரும், மகாராஷ்டிராவில் 130 பேரும், கர்நாடகாவில் 55 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிக்காக ”ஆபரேஷன் நமஸ்தே” என ராணுவம் பெயரிட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசுக்கும், நிர்வாக துறைக்கும் உதவுவது ராணுவத்தின் கடமை என குறிப்பிட்டார். தங்களையும், நாட்டையும் பாதுகாப்பது ராணுவத்தின்  முக்கியமான பணி என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, கடந்த சில வாரங்களில் ராணுவம் 3 அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது எனவும் நரவனே தெரிவித்தார்.

Exit mobile version