சீனாவின் வூகான் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ்!

சீனாவின் வூகான் ஆய்வகத்தில் 3 வவ்வால்களிடம் இருந்து எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் இருப்பதாகவும், எனினும் அந்த வைரசுக்கும், தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள வைரசுக்கும் வேறுபாடுகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 

கொரோனா வைரஸ்…. இந்த பெயரை கேட்டாலே உலகமே அஞ்சி நடுங்குகிறது. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ள கொரோனா வைரசால், சுமார் 54 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தொற்று நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாகவும், உலகம் முழுவதும் இந்த நோய் பரவுவதற்கு சீனாவே காரணம் என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் வூகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பே இல்லை என, மறுப்பு தெரிவித்து வருகிறது சீனா. எனினும், வவ்வால்களிடம் இருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக ஆராய்ச்சியாளர்களிடம் பொதுவான கருத்து நிலவுகிறது.

வூகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுவது வெறும் கட்டுக்கதை என, அந்த ஆய்வகத்தின் இயக்குநர் வாங்க் யான்யீ தெரிவித்துள்ளார். தற்போது தங்களிடம் கொரோனா வைரசின் 3 மூலக்கூறுகள் உள்ளதாகவும், ஆனால் அதற்கும் தற்போது பரவியுள்ள கொரோனா வைரசுக்கும் 79.8 சதவீதம் மட்டுமே ஒற்றுமை இருப்பதாக கூறியுள்ளார்.

சார்ஸ் நோய்க்கான மூலதாரத்தை கண்டறியும் வகையில், வவ்வால்களிடம் இருந்து பெறப்பட்ட கொரோனா வைரஸ்களை, கடந்த 2004ம் ஆண்டு முதல் ஆய்வு செய்து வருவதாகவும், சார்ஸ் வைரசுக்கும், SARS-CoV-2க்கும் இடையே, 80 சதவீத ஒற்றுமை மட்டுமே உள்ளதாக பேராசிரியர் ஷி செங்க்லி தெரிவித்துள்ளார். தற்போது பரவியிருக்கும் கொரோனா வைரஸ், முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதாக பேராசிரியர் செங்க்லி கூறியுள்ளார்.

இதனால் கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது, விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.

Exit mobile version