இணையத்தை அச்சுறுத்தும் பரவும் கொரோனா வைரஸ்

உலக அளவில் மக்களின் சுகாதாரத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ், தற்போது கணினிப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.

உலகநாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் அச்சத்தில் உள்ளன. இதனால் சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்தும், அதிலிருந்து மக்கள் எப்படித் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் பகிரப்படும் தகவல்கள் அனைத்தையும் மக்கள் உடனே பதிவிறக்கம் செய்துவிடுகின்றனர்.
 
மக்களின் இந்த அச்சத்தைப் பயன்படுத்தி சிலர் புதிய விதமான கணினி வைரஸ்களைப் பரப்பி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் உலவும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்த ஃபைல்களில் மறைந்திருக்கும் இந்த வைரஸ்கள், அந்த ஃபைல்களை பதிவிறக்கம் செய்யும் போது, நமது கைபேசிகளிலும் கணினிகளிலும் நுழைந்துவிடுகின்றன. பின்னர் இவை நமது கணினியில் உள்ள தகவல்களை மூன்றாம் நபருக்கு அனுப்பவோ, அழிக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ செய்கின்றன. இதனால் அந்தரங்கத் தகவல்கள், வங்கி விவரங்கள் போன்றவை தவறான நபர்களிடம் சிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இது குறித்து பிரபல கணினிபாதுகாப்பு மென்பொருள் சேவை நிறுவனமான ‘கேஸ்பர் ஸ்கை’ எச்சரிக்கை விடுத்து உள்ளது.
 
இந்த வைரஸ் உள்ள பதிவுகள் குறித்த கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்கள் தொடங்கி உள்ளன என்றாலும், மக்களும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
 
இந்த புதிய கணினி வைரஸ் குறித்து கருத்து தெரிவிக்கும் இணைய வல்லுநர்கள், சமூக வலைத்தளங்களில் காணப்படும்  ஃபைல்களின் இறுதியில் உள்ள பின்னொட்டு டாட் இ.எக்ஸ்.இ (.exe) அல்லது டாட் எல்.என்.கே (.lnk) என்று இருந்தால் அவற்றை பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது நல்லது என்கின்றனர். ஏனென்றால் அந்த ஃபைல்களில்தான் வைரஸ்கள் மறைந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

Exit mobile version