தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று!!

தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்தறை வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்து 550ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் ஒரேநாளில் 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 724ஆக அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 122 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 49 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 25 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திண்டுக்கலில் 10 பேருக்கும், தென்காசி, திருவள்ளூரில் தலா 9 பேருக்கும், அரியலூரில் 6 பேருக்கும், திருச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரேநாளில் 30 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 409ஆகவும், குணமடைந்தோர் சதவீதம் 39 புள்ளி 7ஆகவும் உள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 107 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 527 பேரில் ஆண்கள் 377 பேர், பெண்கள் 150 பேர். ஒரேநாளில் 12 ஆயிரத்து 773 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version