தமிழகத்தில் மேலும் 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 275ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3,940 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 2 ஆயிரத்து 399 பேர் ஆண்கள் என்றும், ஆயிரத்து 541 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் ஒரே நாளில் ஆயிரத்து 992 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த பாதிப்பு 53,762 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 443 பேர் குணமடைந்துள்ளதால், மீண்டோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 656 ஆக உள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 183 பேரும், மதுரையில் 284 பேரும், திருவள்ளூரில் 99 பேரும், வேலூரில் 85 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று காஞ்சிபுரத்தில் 92 பேரும், திருவண்ணாமலையில் 142 பேரும், சேலத்தில்109 பேரும், கள்ளக்குறிச்சியில் 169 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 55.35 சதவீதமாக உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஐந்து லட்சத்து 28 ஆயிரத்தைக் கடந்தது. உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே ஒரு லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்தது.

 

Exit mobile version