டிசம்பர் மாதத்திலேயே பிரான்சில் கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை தாண்டியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்சில் ஒருலட்சத்து முப்பத்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இத்தாலிக்கு பரவி பிறகு, ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியது. இந்த நிலையில், பாரிஸ் நகரைச் சேர்ந்த மருத்துவர் ஈவ்ஸ் கோஹன், டிசம்பர் மாதத்திலேயே பிரான்ஸில் கொரோனா இருந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் இருபத்து ஏழாம் தேதி கிழக்கு பாரிஸைச் சேர்ந்த நாற்பத்து மூன்று வயது நபர் உடல்நலக்குறைவால் அவருடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பிறகு உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்ட கொரோனா அறிக்குறிகள் அவருக்கு பொருந்திப்போனதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நோயாளியின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டதாகவும் ஆனால் அவருடைய மனைவிக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அந்த நோயாளியின் மனைவி சார்லஸ் தெ கௌலே விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சூப்பர்மார்கெட்டில் வேலைபார்த்து வந்ததால் அவர்மூலம் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் சொன்ன டாக்டர் கோஹென், டிசம்பர் பதினான்கு அல்லது இருபத்து இரண்டாம் தேதிகளில் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்ட நாட்கள் கடந்தபிறகு அறிகுறிகள் தென்பட்டிருக்கலாம் எனவும் பிபிசி வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அரசின் அதிகாரப்பூர்வ தகவல்படி ஐரோப்பிய நாடான பிரான்ஸில் முதல் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது ஜனவரி இருபத்து நான்காம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாக்டர் கொஹனின் கூற்றுப்படிப் பார்த்தால் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பே பிரான்ஸில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.