கொரோனோ வைரஸ் பாதிப்பு: 6 நாட்களில் புதிய மருத்துவமனையை கட்டும் சீனா

சீனாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கென்று, ஒரு மருத்துவமனையை ஆறு நாட்களில் உருவாக்கி வருகிறது சீனா.

சீனாவில் கொரோனா வைரஸால் தற்போது 830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 51 பேர் இறந்துவிட்டனர். சுமார் 11 மில்லியன் மக்கள் வசிக்கும் வுஹான் மாகாணத்தில் இந்த வைரஸ் பாதிப்பு முதலில் வெளிப்பட்டது. சம்பந்தப்பட்ட நோயாளிகளால் நகரத்தில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. மருந்தகங்களில் போதிய மருந்துகள் இல்லாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது 6 நாட்களில் புதிய மருத்துவமனை ஒன்று கட்டப்பட உள்ளது. அதில் சுமார் ஆயிரம் படுக்கைகள் இருக்கும் என்று அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீன அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ள பதிவில் 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தளத்தில், வேலைகள் தொடங்கபட்ட நிலையினை, காட்டுகின்றது.

இதே போன்ற நிலை 2003-ஆம் ஆண்டில், சார்ஸ் வைரஸை சமாளிக்க, பெய்ஜிங்கில் இதேபோன்ற மருத்துவமனையினை சீனா அமைத்தது. அதே போல் தற்போது வுஹான் மாகாணத்தில் அமைக்கபடவுள்ள மருத்துவமனை, தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையாகும். அங்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். இதனால் இந்த நோய் மேலும் பலருக்கு பரவாமல் கட்டுப்படுத்த முடியும்.

போர்க்கால வேகத்துடன் அதி விரைவில் வேலைகளைச் செய்து முடித்த முன் அனுபவம் சீனாவுக்கு இருப்பதால், இது சாத்தியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. 2003-ஆம் ஆண்டில் பெய்ஜிங் மருத்துவமனை ஏழு நாட்களில் கட்டப்பட்ட நிலையில், அந்தச் சாதனையை முறியடிக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

பொறியியல் பணியில் சீனா சிறந்து விளங்குகிறது. எனவே இதனை சாத்தியமாக்க முடியும் என்று சீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கட்டிடப்பணிகள் திட்டமிட்ட படியே முடிக்கப்பட்டாலும், மறுபுறம், கொரோனா நோய் பரவல் சீனாவில் அதிகாமாகிக் கொண்டே வருவதால், இந்த அச்சுறுத்தும் நோய் கட்டுபடுத்தப் படுமா? மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியுமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுவது நிதர்சனமே….

Exit mobile version