சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலி எண்ணிக்கை 259 ஆக அதிகரித்துள்ளது. 1795 நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காய்ச்சலில் 213 பேர் உயிரிழந்ததாக நேற்று முந்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 46 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 259-ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, கூடுதலாக 3 ஆயிரத்து 549 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 860-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 1795 நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 17 ஆயிரத்து 988 பேர் மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.சீனா மட்டுமன்றி, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன், வங்கதேசம் உள்ளிட்ட 24 நாடுகளில், 164 பேருக்கு கரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.