கொரோனா வைரசால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐநா சுகாதார நிபுணர்கள், குழந்தைகள், இளைஞர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், நோயாளிகள், சுகாதாரப்பணியாளர்கள் உட்பட அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, கொரோனா பாதிப்பு குறித்து உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில், மக்களிடையே மனச்சோர்வு, பதட்டம் அதிகரித்திருப்பது அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வீடுகளில் வன்முறை அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களின் நேர்காணலில் பீதி, பதட்டம், துக்கம், எரிச்சல் மற்றும் தூக்கமின்மையால் கவலை அடைந்து வருவதாக கூறியதையும் ஐநா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் மிக கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் லட்சக்கணக்கானோர் உள்ளதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று குறித்த நிச்சயமற்ற தன்மையும், அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற வதந்திகளும், எதிர்காலத்தைப் பற்றிய கவலையே, மக்களை நம்பிக்கையற்றவர்களாக உணர வைப்பதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் மன ஆரோக்கியம் குறித்து ஐநா முன்வைத்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் மனநல துறை இயக்குநர் தேவோரா கெஸ்டல் , மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், உலக நாடுகள் இது குறித்த கருத்துக்களை முன் வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த நெருக்கடியால் மொத்த சமூகத்தின் மன ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் எனவும் கெஸ்டல் தெரிவித்தார். தனிமை, பயம், நிச்சயமற்ற தன்மை பொருளாதார நெருக்கடி இவை அனைத்தும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கெஸ்டல் கூறியுள்ளார்.