கொரோனா விசாரணை பணிந்தது சீனா!!!

கொரோனா தொடர்பான விசாரணைக்கு ஆதரவளிப்பதாக சீனா தற்போது தெரிவித்துள்ளது. அத்துடன், 200 கோடி டாலர் நிதியுதவி வழங்குவதாகவும் கூறியுள்ளது. சீனாவின் இந்த திடீர் மனமாற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்து முறையான விசாரணை நடத்த உலக நாடுகள் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, அமெரிக்கா தானாக முன்வந்து இது தொடர்பான விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், இந்த விசாரணைக்கு சீனா ஆதரவளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன், கொரோனா விவகாரத்தில் முதன்முதலில் விசாரணை கோரிய நாடான ஆஸ்திரேலியாவை, பொருளாதார ரீதியில் சீனா தாக்கியது. அந்நாட்டில் இருந்து இறைச்சி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய சீன அரசு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், ஜெனிவாவில் 73ஆவது உலக சுகாதார சபை கூட்டம் நடைபெற்றது. அதில், கொரோனா விசாரணை தொடர்பாக ஆஸ்திரேலியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. அதற்கு இந்தியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் ஆதரவளித்தன. இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

உரிய நேரத்தில், விரைவாக விசாரணை தொடங்கப்படும் என தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், உலக நாடுகள் வழங்கி வரும் நிதியை நிறுத்திவிடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டது. அப்போது, உலக சுகாதார சபையின் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், கொரோனா விவகாரத்தில் தாங்கள் நிறைய தியாகங்களை செய்துள்ளதாக தெரிவித்தார். இவ்விவகாரத்தில், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் தாங்கள் தகவல்களை பகிர்ந்து கொண்டதாக கூறிய அவர், வைரஸை கட்டுப்படுத்த தொடக்கம் முதலே உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் நடத்தவுள்ள விசாரணைக்கு ஆதரவு அளிப்பதாகவும் சீன அதிபர் தெரிவித்தார். விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என கூறிய அவர், கொரோனா பாதிப்புகள் முடிந்த பிறகு விசாரணையை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தற்போது அனைத்து மக்களையும் காப்பதுதான் நமது குறிக்கோள் என தெரிவித்த ஜி ஜின்பிங், வைரஸ் தடுப்பு பணிகளுக்காக உலக சுகாதார நிறுவனத்திற்கு 200 கோடி டாலர்கள் வழங்குவதாகவும் தெரிவித்தார். விசாரணைக்கு சீன அரசு ஆதரவு தெரிவித்துள்ளதும், நிதியுதவி வழங்கியுள்ளதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version