சென்னை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 3,96,147 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசிக்கும் சென்னை, மதுரை, திருநெல்வேலி, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், விருதுநகர், ஈரோடு, அரியலூர், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு அகிய 12 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக கொரோனா பாதிப்பு உள்ள நபர்களின் வீடுகளை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தொலைவு வட்டத்தை கட்டுப்பாட்டு மண்டலமாகவும், 2 கிலோ மீட்டர் தொலைவு வட்டத்தை இடைப்பகுதியாக வரையறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சுகாதார குழுக்கள் வீடு வீடாக சென்று தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ள நபர்களை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், நோய் தொற்று கண்டறியப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த நபர் யாரேனும் இப்பகுதிக்குள் இல்லை என்றால், அவர் எங்கு உள்ளார் என்பதை கண்டறிந்து தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது. அந்த வகையில் நேற்று வரை 12 மாவட்டங்களில் 2,271 பணியாளர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றதாகவும், 1,8,677 வீடுகளில், 3,96,147 நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.