மகாராஷ்டிராவில் 3 ஆம் நிலையை எட்டியது கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாதவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு மூன்றாம் நிலையான சமூக பரவல் தொடங்கிவிட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  நாட்டிலேயே அதிகளவாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் ஆயிரத்து 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 525 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் 34 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ள மும்பை மாநகராட்சி அவர்களில் 11 பேர் வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ அண்மையில் பயணம் செய்யாதவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. மக்கள் மிக நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், கொரோனா வைரஸ் தாக்குதல் மூன்றாம் நிலையான சமூக பரவலை எட்டியுள்ளதாகவும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மீனவர் குடியிருப்பான வொர்லி, பிரபாதேவி மற்றும் லோயர் பரேலில் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அடுத்து தாராவி, குர்லா, நேரு நகர், பாந்த்ரா, அந்தேரி ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் மும்பை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் கொரோனா சமூக பரவல் தொடங்கிவிட்டதாகவும் மும்பை மாநகராட்சி அச்சம் தெரிவித்துள்ளது.

Exit mobile version