தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதிதாக 805 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 82 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 93 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள். புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 491ஆண்கள் மற்றும் 314 பெண்கள் ஆவர்.
முதலிடத்தில் உள்ள சென்னையில் 549பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கற்பட்டு மாவட்டத்தில், 54 பேருக்கும், திருவண்ணாமலையில் 41 பேருக்கும், திருவள்ளூரில் 37 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் புதிதாக 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 7 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களில் 84 சதவீதம் பேர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.