வெளியில் சென்று வந்த கொரோனா நோயாளிகள் மீது வழக்குப்பதிவு!!

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையை மீறி வெளியில் சென்ற 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்தவொரு அறிகுறியும் இன்றி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று வருவதாக புகார்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வெளியில் சென்று வரும் நபர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பலமுறை எச்சரித்த நிலையில் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதிகளவாக ராயபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் தலா 7 பேர் மீதும், திருவொற்றியூரில் 4 பேர் மீதும், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், வளசரவாக்கம் மண்டலங்களில் தலா 3 பேர் மீதும் என சென்னை முழுவதும் 40 பேர் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இனி இவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வெளியில் சென்று வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அவர்களையும், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களையும் கோவிட் 19 மையங்களில் தங்கவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version