கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விரைவில் இரண்டாம் அலை தாக்குதல் தொடங்கும் என எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கமும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மறுபக்கம் பொருளாதார இழப்புகளையும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் சரி செய்ய பல்வேறு நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பி வருகிறது. ஆனால், கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதில் உள்ள மிகப்பெரும் அச்சுறுத்தலே இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது தான் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். தொடக்கத்தில் சீனா, ஈரான், தென் கொரியாவில் அதிவீரியத்துடன் பரவிய கொரோனா பெருந்தொற்று பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டது. கடந்த சில வாரங்களாக பிரேசில், ரஷ்யா, பொலிவியா துருக்கி போன்ற நாடுகள் கொரோனா ஹாட்ஸ்பாட்களாக மாறி வருகின்றன. அதேநேரம் ஜப்பான், சவுதி அரேபியா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த தளர்வுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால மருத்துவரான மைக் ரேயன், குறிப்பிட்ட இடங்களில் கொரோனா தொற்று குறைந்தாலும் பல்வேறு நாடுகளில் நோய் தீவிரமடைந்து வருவதாக கூறியுள்ளார். கொரோனாவின் தன்மையை அறிவதில் இன்றளவும் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதுநாள் வரை கொரோனா நமக்கு கற்றுத்தந்த பாடமே எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நோய் பரவலாம் என்பது தான். இதனால் உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே ஊரடங்கை விலக்க வேண்டும்.. இடையிலேயே ஊரடங்கை விலக்க முடிவு செய்வது குறைந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வழி வகுக்கும் என தெரிவித்துள்ளார் மைக் ரேயன். மேலும், 1918-ம் ஆண்டு நிகழ்ந்த ஸ்பானிஸ் காய்ச்சல் மற்றும் 2009-ம் ஆண்டு ஏற்பட்ட H1N1 நோய் தொற்றின் பரவல் விவரங்களை வைத்து பார்த்தால் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பெரும் அளவில் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பாதிப்பு குறைந்தாலும், அதிகரித்தாலும் அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்கு நாம் தொடர்ந்து கொரோனாவுடனான போரில் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து நாடுகளும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், அடுத்த கட்ட பாதிப்புகள் தோன்றினால் திவீர நோய் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.