கொரோனா வைரசின் 2வது அலை பரவும் வேகம், பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இந்தியப் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பங்கு வர்த்தகத்தில் நம்பிக்கையின்றி தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளதால் வரும் நாட்களில் தங்கத்தின் விலையும் புதிய உச்சத்தை தொடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
2020 ஆண்டு மார்ச் 23ம் நாள், இந்தியப் பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தன. சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தனது கோரமுகத்தை காட்டியதால், பல மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்தன. மாநிலங்களின் இந்த ஊரடங்கு அறிவிப்பு இந்தியப் பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 3 ஆயிரத்து 934 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. சிறு, குறு தொழிற்சாலைகள் துவங்கி பன்னாட்டு நிறுவனங்கள் வரை உற்பத்தியை நிறுத்தியதால் மொத்த உள்நாட்டு உற்பத்தி பூஜ்யத்திற்கு கீழ் குறைந்து மைனஸ் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்தது.
இதன் தொடர்ச்சியாக மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதுடன் இந்தியப் பொருளாதாரமும் எழுச்சியடைந்தது. 2021ம் ஆண்டு ஜனவரி மாதம், சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது வளர்ச்சிக்கான அறிகுறியாகவே கருதப்பட்டன
இதனால் ரிசர்வ் வங்கியும், நடப்பு ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்து இருந்தது. ஆனால் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக வீசுவதால், பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. பல மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்து வருவதும் தடுப்பூசி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதமும் முதலீட்டாளர்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் கடந்த ஒருவார காலமாக பங்குச் சந்தைகள் மீண்டும் வீழ்ச்சியடையத் துவங்கியுள்ளன. வங்கிகளுக்கு கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்காத நிலையில், வங்கிகள் வைப்புத் தொகைக்கு கொடுக்கும் வட்டிவிகிதத்தை குறைத்துள்ளன. இதனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால், தங்கத்தின் விலை சரமாரியான உயர்ந்துள்ளதாகவும் வரும் நாட்களில் மேலும் விலை உயர்வை சந்திக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
எனினும் தடுப்பூசி செலுத்துவதில் இந்திய அரசு தொடர்ந்து காட்டும் முனைப்பும், பொதுமுடக்கம் இப்போதைக்கு இல்லை என்ற உறுதிமொழியும் இந்தியப் பொருளாதாரத்தை வீழ்ச்சியில் இருந்து மீட்கும் என்றும், ரிசர்வ் வங்கி முன்பு கணித்த பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்றும் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்