இந்தியாவில் இதுவரை 10 கோடியே 43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், மீண்டும் கொரோனா பரவலின் தாக்கம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதர் மோடி நான்கு நாள் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என அறிவித்தார். இந்தநிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கியது. தடுப்பூசி திருவிழாவில் 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமாக வந்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
தடுப்பூசி திருவிழாவையொட்டி, பிரதமர் மோடி, நான்கு முக்கிய வேண்டுகோள்களை நாட்டு மக்களிடம் முன் வைத்தார். அதன்படி, ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ளவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள செய்ய வேண்டும் – கொரோனா சிகிச்சைக்கு பணமில்லாமலும், அதுபற்றி அறியாமலும் இருப்பபவர்களின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் – ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவதுடன், பிறரையும் அணிய செய்ய வேண்டும் – யாருக்காவது கொரோனா இருந்தால், அங்குக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நான்கு நாள் தடுப்பூசி திருவிழாவில், தடுப்பு மருந்துகளை வீணடிக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, நாடு முழுவதும் நேற்று வரை 10 கோடியே 43 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி திருவிழா மூலம் ஒரே நாளில் 27 லட்சத்திற்கு மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.