கொரோனா தடுப்பு மருந்து அங்கீகாரம் நிறுத்தி வைப்பு… ஏன்?

தங்களது கொரோனா தடுப்பு மருந்துக்கு, அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரிய சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் ஆவணங்களை, தடுப்பூசிக்கான வல்லுநர் குழு கேட்டுள்ளது. அவை என்னென்ன ஆவணங்க ?

அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா உள்ளிட்ட 6 நாடுகளில், ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவில் எந்த கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டு வரும் என மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த வாரம், சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள், தங்களது தடுப்பூசிகளுக்கு, அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கக் கோரி, தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்தன.

2019 மருந்து மற்றும் மருத்துவ பரிசோதனைகள் சட்டத்தின் கீழ் அனுமதி கோரப்பட்ட இரண்டு நிறுவனங்களின் விண்ணப்பங்கள், நிலுவையில் வைக்கப்பட்டன. இந்த சட்டத்தில், நோயின் தன்மை, அவசர தேவை மாற்று சிகிச்சையின் பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்து, ஒரு தடுப்பு மருந்து அங்கீகரிக்கப்படும் என்ற நிலையில், அவசர கால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்படுவதற்கு முன்னர், அந்த இரண்டு நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் ஆவணங்களை தடுப்பூசிக்கான வல்லுநர் குழு கேட்டுள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகள் முழுமையாக முடிவு பெறாத சூழலில், தடுப்பூசியை அங்கீகரிப்பதற்கான நன்மை விகிதத்தை மதிப்பிடும் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் வேறு என்றும், இந்தியாவில் தடுப்பு மருந்துக்கான அங்கீகாரம் வழங்குவதற்கு, முறையான பரிசோதனை செய்து, பக்க விளைவுகள் இல்லை என்பதற்கான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என வல்லுநர் குழு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, தடுப்பு மருந்துக்கான அங்கீகாரம் கிடைப்பதற்கு, சில காலம் ஆகலாம் என்பதால், இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்படலாம் என்று தெரிகிறது.

Exit mobile version