கோவிஷீல்டின் விலை உயர்வு – உருமாறிய கொரோனாவுக்கு எமனான கோவாக்சின்!

மே 1 முதல் 18 வயது மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில்,கொரோனா வைரஸுக்கான முக்கிய தடுப்பு மருந்தான கோவிஷீல்டின் விலையை, சீரம் நிறுவனம் இருமடங்காக உயர்த்தியுள்ளது. மற்றொரு தடுப்பூசியான கோவாக்சின் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக செயல்படும் திறன் பெற்று இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வீரியத்துடன் பரவி வருவதால், தடுப்பூசிக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், மே 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி விலையை சீரம் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி இனி, மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச தடுப்பூசிகளின் விலையை ஒப்பிடும்போது, கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை குறைவு என அந்நிறுவனம் கூறியுள்ளது. உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசியில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு அளிக்க சீரம் நிறுவனம் ஒப்புதல் அளித்து உள்ளது. எஞ்சிய 50 சதவீத தடுப்பூசியை மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைக்கும் வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவாக்சின் தடுப்பூசி உருமாறிய கொரோனா பாதிப்புகளை தடுப்பது தொடர்பான ஆராய்ச்சியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் பிரிட்டன் கொரோனா, பிரேசில் கொரோனா, தென்னாப்பிரிக்கா கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பு மருந்து திறன்பட செயல்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. இந்தியாவின் சில பகுதிகளில் கண்டறியப்படும் இரட்டை உருமாறிய கொரோனா பாதிப்பையும் கோவாக்சின் தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version