நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல!- மருத்துவமனை விளக்கம்

 

சென்னை சாலிகிராமத்தில் தனது இல்லத்தில் இருந்தபோது நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவர், உடனடியாக வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விவேக்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ரத்த நாள அடைப்பை சரி செய்யும் ஆஞ்சியோ சிகிச்சை செய்தனர்.

இதனை தொடர்ந்து, வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ஒரே நாளில் ரத்தநாள அடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லையென்றும், நடிகர் விவேக்குடன் சேர்த்து நேற்று 800க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும், விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணமல்ல எனவும் விளக்கமளித்தார்.

இதனிடையே, விவேக்கின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. நடிகர் விவேக்கிற்கு இதயத்தின் இடதுபுறத்தில் 100 சதவீத அடைப்பு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், எக்மோ உதவியுடன் சிகிச்சை தொடர்வதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version