தமிழ்நாட்டில் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஏப்ரல் 8ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, தடுப்பூசி திருவிழா நடத்தலாம் என அறிவுரை வழங்கினார். அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்த சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அதனை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. அதிக நபர்களுடன் பணிபுரியும் தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றிலும் தடுப்பூசி முகாம்களை தேவைக்கேற்ப நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமுடைய நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்கள், உள்ளாட்சித்துறை மற்றும் நகர் நல அலுவலர்களை அணுகி சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்யலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.